Sunday 19th of May 2024 03:23:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
தென் கொரியாவில் பருவகால காய்ச்சல்  தடுப்பூசி பெற்ற 13 பேர்  உயிரிழப்பு!

தென் கொரியாவில் பருவகால காய்ச்சல் தடுப்பூசி பெற்ற 13 பேர் உயிரிழப்பு!


தென் கொரியாவில் பருவகால காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட குறைந்தது 13 பேர் சமீபத்திய நாட்களில் இறந்துள்ளமையை அடுத்து காய்ச்சலுக்கான தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனினும் இவற்றில் பல இறப்புக்களின் தடுப்பூசியுடன் நேரடித் தொடர்பற்றவை எனத் தெரியவந்துள்ள நிலையில் சுமார் 19 மில்லியன் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் யோசனை எதுவும் இல்லை என தென் கொரிய சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

தடுப்பூசிகளில் எந்த நச்சுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி பெற்ற பின்னர் இறந்தவர்களில் 6 போ் தொடர்பான விசாரணைகளில் அவா்களின் ஐந்து பேருக்கு வேறு அடிப்படை நோய்கள் இருந்தமை தெரியவந்துள்ளதாக தென் கொரிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளைஞர்கள் மற்றும் மூத்தோருக்கான இலவச காய்ச்சல் தடுப்பூசித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

குளிரூட்டப்பட வேண்டிய சுமார் 5 மில்லியன் தடுப்பூசிகளை மருத்துவ மையங்களுக்குக் கொண்டு செல்லும்போது அவற்றில் சில மாறுபட்ட வெப்ப நிலைகளில் பராமரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த திட்டம் மூன்று வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

தென் கொரியாவிற்கான தடுப்பூசிகள் உள்ளூர் மருந்தாக்க நிறுவனங்கள் உட்பட் பல்வேறு மூலங்களில் இருந்து பெறப்படுகின்றன.

ஜி.சி. பார்மா, எஸ்.கே. பயோ சயின்ஸ் மற்றும் இலியாங் பார்மாசூட்டிகல் கோ, பிரான்சின் சனோஃபி மற்றும் பிரிட்டனின் கிளாக்சோஸ்மித்க்லைன் ஆகியன பிரதான மருந்து விநியோகஸ்தர்களாக உள்ளனர்.

எல்.ஜி.செம் லிமிடெட் மற்றும் போரியுங் பயோஃபர்மா கோ லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் தடுப்பு மருந்து விநியோக நிறுவனங்களில் அடங்குகின்றன.

தடுப்பூசி போடப்பட்டவா்களுக்கு ஏற்பட்ட மரணங்கள் குறித்து உடனடியாகக் கருத்துத் தெரிவிக்க இந்நிறுவனங்கள் மறுத்துவிட்டன.

கோவிட்-19 தொற்று நோய் நெருக்கடியின் மத்தியில் பருவகால காய்ச்சல்களால் மருத்துவமனைகளில் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க பருவகால தடுப்பூசி திட்டத்தை தென் கொரியா முன்னெடுத்துள்ளது.

ஒக்டோபர் 13 ஆம் திகதி தடுப்பூசித் திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 8.3 மில்லியன் மக்களுக்கு இலவச காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பருவகால காய்ச்சல் தடுப்பூசியுடன் தொடர்புடைய 6 பேர் கடந்த 2005 –இல் உயிரிழந்ததாக தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் முந்தைய ஆண்டுகளுடன் இவ்வாண்டுக்கான நிலைமைகளை ஒப்பிடுவது கடினம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE